என் இலக்கு

என் வாழ்க்கையின் இலக்கு தொடர்பில் சில சந்தர்ப்பங்களில் அல்ல, பல சந்தர்ப்பங்களில் எனக்கு சந்தேகம் வந்துவிடும். அப்போதெல்லாம் என் சிறு வயதை நினைத்துக் கொள்வேன். அப்படி என்ன நடந்தது சிறு வயதில்? 

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே அதாவது பன்னிரண்டு வயதிலேயே ஒரு கையெழுத்து சஞ்சிகையை உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன். பாக்கெட் டயறி சைசில் இருக்கும் அது. பதின்மூன்று வயதில் நூலகம் சென்றேன். அதற்கும் முன்பே அதாவது பத்து வயதிலெல்லாம் திருட்டுத்தனமாக கதைப் புத்தகங்களை படித்து வீட்டில் மாட்டி அடி வாங்கியிருக்கிறேன். புத்தக ஆர்வம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்கு பின்னரே கையெழுத்து சஞ்சிகை முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன் என்று இதனூடாக புரிந்து கொள்கிறேன். 

பதின்மூன்று வயதில் அதாவது எட்டாம் வகுப்பில் சில பல கையெழுத்து சஞ்சிகை முயற்சிகள். அந்த வருடம் தான் என் பெயரில் ஒரு நாலு வரிக் கவிதையும் பத்திரிகையில் வெளியானது. வேண்டும் என்ற தலைப்பில். அதற்கு பிறகு பாடசாலை முடியும் வரைக்கும் பல வழிகளிலும் கையெழுத்து சஞ்சிகை முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. பாடசாலைக் காலம் முடிந்து சில மாதங்கள் வரை கையெழுத்து சஞ்சிகையை நடத்தினேன். பாடசாலைக் காலத்தின் பின்னர் பத்திரிகையில் எழுதியதாக நினைவில்லை. ஒன்றிரண்டு வந்திருக்கலாம். 99 வீதமானவை பாடசாலைக் காலத்திலேயே வந்துவிட்டன. அப்போது 70 க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 

இன்றும் நான் ஒரு எழுத்தாளர் என்று நம்புகின்றேன் என்றால் இந்த அடித்தளம் தான் அதற்குக் காரணம். நான் ஒரு ஊடகவியலாளர் என்று நம்புகிறேன் என்றால் அதற்கு இந்த கையெழுத்து சஞ்சிகை முயற்சிகள் தான் காரணம். இதுதான் என் வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ளவும் இந்த பாடசாலை காலம் தான் காரணம். 

இப்போ நீங்க சொல்லுங்க, நான் யார்?

Comments